கடம்ப மரமாக இருந்த திருமாலை, பிரம்மா வழிபட்டதால் இத்தலம் கடம்பனூர் என்று பெயர் பின்னர் 'கரம்பனூர்' என மருவியது. முற்காலத்தில் பிரம்மாவிற்கு ஐந்து தலைகள் இருந்தது. அதனால் அவருக்கு கர்வம் ஏற்பட்டது. அவரது கர்வத்தை அடக்குவதற்கு சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்ய, கபாலம் அவரது கையில் ஒட்டிக்கொண்டது.
சிவபெருமான் கையில் கபாலத்துடன் இத்தலத்திற்கு வந்தபோது, மகாவிஷ்ணு திருமகளை அனுப்பி அந்த கபாலத்தில் பிச்சையிடச் செய்தார். அதனால் சிவபெருமானின் சாபம் நீங்கியது. இந்த க்ஷேத்திரத்தில் சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தரிசனம் தருவதால் 'மும்மூர்த்திகள் திருத்தலம்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் புருஷோத்தமன் என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனத்துடன், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் 'பூர்ணவல்லி' என்று வணங்கப்படுகின்றார். கதம்ப முனி, உபரி சரவஸீ, சனகாதியர், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
திருமங்கையாழ்வார் 1 பாசுரம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|